இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றது.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது 54 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
எனினும், டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸின் சதங்களால் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷுப்மான் கில் தலைமையிலான அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்தை பணித்தது.
ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸை குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க வைத்தனர்.
பின்னர் வில் யங் மற்றும் மிட்செல் ஆகியோர் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தி நியூஸிலாந்து அணியின் இன்னிங்ஸை நிலைப்படுத்தினர்.
பின்னர் ராணா யங்கை 30 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.
பின்னர் க்ளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் கைதுபோர்த்து இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.
15 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் மிட்செல் தனது ஒன்பதாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இது தொடரில் அவரது இரண்டாவது சதமாகும்.
அதேநேரம் பிலிப்ஸ் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களை பெற்று ஒரு பெரிய ஓட்ட இலக்கினை நோக்கி நியூஸிலாந்து அணியை அழைத்துச் சென்றார்.
219 ஓட்டங்கள் எடுத்த இந்த கூட்டணி 44 ஆவது ஓவரில் முடிவுக்கு வந்தது.
பின்னர், அணித் தலைவர் மைக்கேல் பிரேஸ்வெல்லின் தாமதமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 337/8 ஓட்டங்களை குவித்தது.
பின்னர், இந்திய அணியின் தலைவர் ஷுப்மான் கில் இந்தியாவுக்கான சேஸிங்கை பிரகாசமாகத் தொடங்கினார்.
எனினும், பவர்பிளேயில் ரோஹித் சர்மா வெளியேறியதால் நியூசிலாந்து ஆரம்பத்திலேயே பெரும் அடியைத் தந்தது.
தொடர்ந்து ஆறு ஓவர்களுக்குள் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையினால் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவுகள் ஏற்பட்டன.
13 ஆவது ஓவரில் 71/4 என்ற நிலையில் இந்தியா தடுமாறியது.
எனினும் நிலைத்து ஆடிய விராட் கோலி தனது 54 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
அத்துடன், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் வீரரான ரிக்கி பாண்டிங்கைக் கடந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரரானார்.
ராணாவுக்கும் கோலிக்கும் இடையிலான 99 ஓட்டங்கள் கூட்டணி, ஜகாரி ஃபோல்க்ஸ் பந்துவீச்சினால் முடிவுக்கு வந்தது.
அடுத்த பந்திலேயே ஜகாரி மீண்டும் ஒரு பந்து வீசி மொஹமட் சிராஜை பெவிலியன் பக்கம் திருப்பி அனுப்பினார்.
அப்போது இந்தியாவின் வாய்ப்புகள் மீண்டும் கேள்விக் குறியாகின.
எனினும் கோலி தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்.
மறுமுனையில் குல்தீப் யாதவ் அதிக பவுண்டரிகளை அடித்தார், ஆனால் இறுதியில் கிளார்க்கின் பந்தில் ஒரு ஷாட்டை தவறவிட்டதால் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்தியா 46 ஓவர்களில் 296 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதனிடையே இந்தியாவின் வெற்றிக்காக போராடிய விராட் கோலி 108 பந்துகளில் 124 ஓட்டங்களை எடுத்தார்.
இது சர்வதேச அரங்கில் அவரது 85 ஆவது சதமாகும்.
இது 3-0 என்ற வரலாற்று டெஸ்ட் தொடரை வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் தொடரை வென்ற சந்தர்ப்பம் இதுவாகும்.
இரு அணிகளும் புதன்கிழமை தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.
இது பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக அவர்களின் இறுதிப் போட்டியாகும்.
















