மட்டக்களப்பில் பிறந்த நாளுக்குக் கேக் வெட்டியவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைதுசெய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.
குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணைசெய்த பின்னரே நீதிமன்றில் ஆஜர்படுத்தமுடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது.
நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்கவேண்டும்.
இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்ப மஞ்சல் கொடிகளைகட்டி நிகழ்வுகளை செய்யும்போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.
எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு மஞ்சல் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும்போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
















