கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, தற்கொலை சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.
கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவியின் விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூர்ய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது அதற்கு கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி , இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரியவில்லை என்று சாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா? என்று கேள்வியெழுப்பிய முஜிபுர் ரஹ்மான் , இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பந்தப்படட ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்கவும் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரை கைதுசெய்யுமாறு நேற்று கொட்டாஞ்சேனை உள்ளிட்ட சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர்கள் குழு ஒன்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














