வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,
மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது.
இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது.
மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம்.
நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும்.
தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார்.














