ஒடிசாவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட். படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவரை பேராசிரியர் சமீரா குமார் சாகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 30ம் திகதி கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் புகாரளித்திருந்தார்.
அத்துடன் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் புகார் அளித்து 11 நாட்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை கல்லூரி வளாகத்திலேயே மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் 90 % தீக்காயமடைந்த மாணவி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திலீப் கோஷ், பேராசிரியர் சமீரா குமார் சாகு ஆகியோர் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். சாகுவை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி அறையில் இருந்து உடலில் தீப்பற்ற வைத்தபடி மாணவி கல்லூரி வளாக பகுதியில் ஓடி வருகிறார். அவரை ஒருவர் தடுத்து காப்பாற்ற முயன்றார். அவரதுஉடையில் தீப்பிடித்ததும் பின்வாங்கினார். அதே சமயம் வளாகத்தில் நின்று இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ மூலம் – NDTV News



















