இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியானது எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரினை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு (16) நடைபெற்ற போட்டியில் மஹேதி ஹசனின் சிறந்த பந்து வீச்சு மற்றும் தான்சித் ஹசன் தமீமின் அரைசதம் என்பன பங்களாதேஷ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தன.
தம்புள்ளையில் நடைபெற்ற டி:20 தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர், பல்லேகலயில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான டி:20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சரித்த அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49 ஓட்டங்களுக்குள்ளே நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னரும், சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழ, இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தட்டுத்தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பத்தும் நிஸ்ஸங்க 39 பந்துகளில் 46 ஓட்டங்களையும், தசூன் சானக்க 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி கடைசி ஓவரில் அடித்த 22 ஓட்டங்களில் 21 ஓட்டங்களை சானக்க எடுத்தமை விசேட அம்சமாகும்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மஹேதி ஹசன் 11 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றியிருந்தார்.
பின்னர் 133 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது.
அதன்படி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார வீசிய பந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பர்வேஸ் ஹொசைன் எமோன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும், பின்னர் தான்சித் ஹசன் தமீமும், அணித் தலைவர் லிட்டன் தாஸும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 50 பந்துகளில் 74 ஓட்டங்களை சேர்த்தனர்.
பின்னர் லிட்டன் தாஸ் 32 ஓட்டங்களுடன் கமிந்து மெண்டீஸின் பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
அதையடுத்து களமிறங்கிய டோஹித் ஹிரிடோய் தமீமுடன் கைகோர்த்து இணைப்பாட்டமாக 59 ஓட்டங்களை எடுக்க பங்களாதேஷ் அணி இறுதியாக 21 பந்துகள் மற்றும் 8 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

கடந்த ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக தனது முந்தைய சிறந்த டி:20 67 என்ற சர்வதேச ஓட்ட எண்ணிக்கையை இந்த இன்னிங்ஸில் முறியடித்த தமீம் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 47 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார்.
மறுபுறம் ஹிரிடோய் 25 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மஹேதி ஹசனும், தொடரின் ஆட்டநாயகனாக லிட்டன் தாஸும் தெரிவானார்கள்.
இந்தப் போட்டியுடன் இலங்கைக்கான பங்களாதேஷ் அணியின் சுற்றுப் பயணமானது நிறைவுக்கு வந்தது.
முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 1:0 என்ற கணக்கிலும், அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




















