தர்மஸ்தலாவில் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி ஆலயத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த ஜூலை 4ஆம் திகதி திகதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார்.
அதில் கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை ஆலயத்தின் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஆலயத்தின் முன்னாள் ஊழியரை பெல்தங்காடி நீதிமன்றில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அத்துடன் புகார்தாரரின் வழக்கறினர்களும் முதலமைச்சர் சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா, ‘தர்மஸ்தலாவில் பெண்கள் காணாமற் போனமை மற்றும் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். வழிபாட்டுத்தலமான தர்மஸ்தலா, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்த விவகாரத்தில் முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














