இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 21ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய இராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்கள் ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.
உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது ” இவ்வாறுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.















