அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிப் போருக்கு மத்தியில் கால்வானில் இருதரப்புப் படைகளும் மோதிய ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்தியாவும் சீனாவும் தங்கள் வழிகளைச் சரிசெய்ய முயற்சித்து வருகின்றன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வருகை தந்து திங்கட்கிழமை (18) இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ட்ரம்பின் வரிப் போரினால் ஏற்படும் உலகளாவிய இடையூறுகளை எதிர்கொள்ள இரு ஆசிய சக்திகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் இந்த விஜயம் ஒரு மைல்கல்லாக அமைகிறது.
சந்திப்பில் எஸ். ஜெய்சங்கர், வாங்கின் வருகை இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள், புனித யாத்திரைகள், மக்களிடையேயான தொடர்புகள், நதி தரவு பகிர்வு, எல்லை வர்த்தகம், இணைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரேன் மோதல் மற்றும் அமெரிக்க வரிகள் உள்ளிட்ட உலகளாவிய விடயங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
எல்லைப் பிரச்சினைகள் குறித்து வாங் யி இன்று (19) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் விவாதிக்க உள்ளார்.
மேலும் அவர் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்வதற்கு முன்னதாக வாங் யி இரண்டு நாள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திக்கலாம்.
2020 ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கிய உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மீதான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினரும் கடந்த ஒக்டோபரில் ஒரு புரிதலை எட்டிய பின்னர் இந்தியாவுக்கு பயணம் செய்யும் முதல் சீன அமைச்சர் வாங் யி ஆவார்.
2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் இருதரப்பு உறவுகளை ஆறு தசாப்த கால மிகக் குறைந்த நிலைக்கு கொண்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.



















