இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர்களை இந்திய அணியிலிருந்து விடுவிப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் , இந்தத் தகவல்களை இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார்.
அத்துடன், அவுஸ்திரேலிய தொடருடன் அவர்களை விடுவிக்கும் எண்ணம் இந்திய கிரிக்கெட் சபைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்வதில்லை என்றும் ஓய்வு குறித்து அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் கூறியுள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாகச் செயற்படுவதால், அவர்கள் ஓய்வு பெறுவது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும் இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.


















