முதியவர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் ஈபிள் டவரின்(Eiffel Tower) மாதிரை அமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஓய்வுபெற்ற உலோகத் தொழிலாளியான ஜீன் கிளாட் ஃபாஸ்லர் (Jean Claude Fassler) என்பவரே தனது கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

77 வயதான ஃபாஸ்லர், பிரான்ஸ் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் குஸ்தாவ் ஐஃபெல்-இன் நீண்டகால ரசிகராவார். இதன்காரணமாக “ஈபிள் டவர் மாதிரியை தன் கைகளால் உருவாக்க வேண்டும்” என்ற கனவை அவர் ஓய்வு பெற்ற பின்னர் தொடங்கினார்.
பத்தில் ஒரு பகுதி அளவில் (one-tenth scale) வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரி, உண்மையான ஈபிள் டவரின் அசல் வடிவத்தையும் நுணுக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
உலோகத் துண்டுகள், இணைப்புகள் மற்றும் வடிவமைப்புகள் அனைத்தும் துல்லியமாக அளந்து, உறுதியான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. ஃபாஸ்லர் எட்டு ஆண்டு காலம் முழுவதும் தனது பேரனின் உதவியுடன் மிகுந்த உழைப்பும் பொறுமையும் செலுத்தி இதனை உருவாக்கினார்.

குடும்பத்தின் ஆதரவும் ஊர் மக்களின் ஊக்கமும் இந்த முயற்சிக்கு துணை நின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஃபாஸ்லர் கூறுகையில்: “நான் 20 வயதில் இருந்தே ஈபிள் டவரின் ரசிகன். அதனைப் போல ஒரு மாதிரியை என் கைகளால் உருவாக்க வேண்டும் என்பது என் கனவு. இப்போது அது என் வீட்டின் பின்புறத்தில் நிற்கிறது என்பதை நினைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.”இந்த மாதிரியை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். புகைப்படம் எடுக்கவும், பார்வையிடவும் இம்மாதிரி ஒரு சிறிய பார்வையாளர் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. ஃபாஸ்லரின் குடும்பத்தினர், “அவரது வாழ்நாள் கனவு நிறைவேறியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் நகரின் மையத்தில் எழுந்திருக்கும் அசல் ஈபிள் டவர் போலவே, இம்மாதிரி தற்போது அந்த ஊரில் பெருமையை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கது.
















