அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீன நகரமான தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இருவரும் கலந்து கொண்ட மறுநாளும், இரண்டாம் உலகப் போரின் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான சீன இராணுவ அணிவகுப்புக்கு முந்தைய நாளிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “முன்னோடியில்லாத அளவில்” இருப்பதாக புட்டின் இந்த சந்திப்பின் போது பாராட்டினார்.
மேலும், அவர்களின் “நெருக்கமான தொடர்பு ரஷ்ய-சீன உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது” என்றும் கூறினார்.
உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய தலைவருடனான ஒப்பந்தம் ட்ரம்பிற்கு எட்டாத நிலையில், ஜி இப்போது பெய்ஜிங்கில் புட்டினை வரவேற்றுள்ளார்.
திங்களன்று நடந்த உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் புட்டின் மேற்கத்திய அரசாங்கங்களை விமர்சித்தனர்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீனாவில் ஜப்பானியர்கள் சரணடைந்த 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ஜி ஜின்பிங் புதன்கிழமை (03) நடத்த உள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமல்லாமல், ஒரு இராஜதந்திர ரீதியாக பெய்ஜிங்கின் சக்தியை சர்வதேச அரங்கில் முன்வைக்க ஜி ஜின்பிங் முயற்சிக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.



















