திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இராஜதந்திர அனுசரணையில் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் இதனைக் கூறினார்.
இதற்கிடையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா கூறிய அவர், இந்த ஆண்டு அவர்களில் 18 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விடே பொலிஸ் குழு, பொலிஸ்மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தவிர, மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பரும் அவர்களில் ஒருவர்.
இந்தக் குழுவில், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிகள் அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை கெஹல்பத்தர பத்மேவின் குழுவினர் செய்ததாக நம்பப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமாங்க, அதே நாளில் புத்தளம், பகுதியில் விசேட படையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கமராக்களை சோதனைே செய்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவி செய்ய ஒரு பெண்ணும் வந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
குறித்த பெண், சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புத்தகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது,
அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என்பது தெரியவந்தது.
குற்றத்தைச் செய்த பின்னர், இஷாரா செவ்வந்தி மித்தேனியாவிலிருந்து ஜே.கே. பாய் என்ற நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல அவர் சுமார் 6.5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும், அங்கு அவர் சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து அவர் நோபாளத்துக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியில் அவர் நேபாளத்தின் மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் தங்கியிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று (13) கைது செய்யப்பட்டார்.














