நாடு முழுவதும் 2025 ஜனவரி 01 முதல் ஒக்டோபர் 13 வரை மொத்தம் 5.7 மில்லியன் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் இதனைக் கூறினார்.
குறித்தக் காலக்கட்டத்தில் அன்றாடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 4,802 தேடப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ.730 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2024 க்கு இடையில் ரூ.39.02 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2025 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 13 வரை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத சொத்து விபரம் பின்வருமாறு:
354 சவரன் தங்கம்
72 வாகனங்கள்
35 வீடுகள்
670 மில்லியன் ரூபா ரொக்கப் பணம்
34 ஏக்கர் காணிகள்
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களைக் கைப்பற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.














