காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாள காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வாடகை வீடுகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (15) நாடு கடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
அந்த செய்திச் சேவையின் தகவலின்படி,
இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே ( வயது 26), ஜீவதாசன் கனகராசா ( வயது 33), தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷியமந்த டி சில்வா (49), கெனடி பஸ்தியம்பிள்ளை ( வயது 35), மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ( வயது 43) ஆகியோரே நாடு கடத்தப்பட்டவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025 பிப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
இந்த அறிவிப்பு நேபாளம் உள்ளிட்ட இன்டர்போல் உறுப்பு நாடுகளை அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தூண்டியது.
காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வழக்கு குறித்து குறிப்பாக கவலை தெரிவித்ததாக நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, நக்சலில் உள்ள நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகம், சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது என்று அந்த அதிகாரி கூறினார்.
காவல்துறை விசாரணையில், ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
ஆகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது.
சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் பத்மே தான் மூளையாக செயல்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் இரகசியமாக வசித்து வந்ததும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டதும் கண்டறியப்பட்டது.
அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரை வழியாக எல்லையைத் தாண்டியதாகவும் நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் யாரும் நேபாளத்தில் குற்றங்களைச் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்தனர்.
சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர், சட்டத் தேவைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மேற்பார்வையின் கீழ் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இலங்கை பாதாள உலக நபர்கள் நேபாளத்தில் தஞ்சம் புகுந்தது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை உறுதி செய்வதில் நேபாள காவல்துறைக்கும் இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமாக அமைந்ததாகவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது.
















