தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்வார்கள் என்று சியோலின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இன்று (24) தெரிவித்தார்.
இதன்போது தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சியோலின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் வை சுங்-லாக் தெரிவித்தார்.
லீ ஜே மியுங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்பில் பாதுகாப்பு, அமெரிக்க வரிகளைச் சுழவுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
இரு தலைவர்களும் ஆழமான இருதரப்பு கூட்டாண்மை மற்றும் வட கொரியா தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சியோலின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் வை சுங்-லாக் குறிப்பிட்டார்.
எனினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது குறித்து அவர் உறுதியாக குறிப்பிடவில்லை.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆசியாவிற்கான பயணத்தின் ஒரு பகுதியாக, ட்ரம்ப் அடுத்த வாரம் தென் கொரியாவில் சீன ஜனாதிபதியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















