நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களில் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அனர்த்தங்களின் விளைவாக நான்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும், மோசமான வானிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தங்களது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் 117 என்ற துரித இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இன்று (24) அதிகாலை 05.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த காற்றழுத்தம் விருத்தியடைந்துள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.














