வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் கடமைகளிலிருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, பிறிதொரு வழக்குச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகிர் ஆகிய இரு பிரதிவாதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைகளை மார்ச் 18ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வமான கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு நட்டம் விளைவித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













