உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்களுக்கு கீழே தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (28) உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது.
புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், உலகளவில் தங்கத்தின் விலை குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது.
2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,381.21 என்ற உச்சத்தை எட்டியது.
ஆனால் கடந்த வாரம் 3.2 சதவீதம் பின்வாங்கி திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 க்கும் கீழே சரிந்தது.
சற்று முன்னர் வரையான சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1.87% சரிந்து 3,930.14 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதேநேரம் வெள்ளி 46.41 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்கள் தளவர்வதற்கான அறிகுறிகளும் தங்கத்தின் பாதுகாப்பான புகலிட ஈர்ப்பைக் குறைத்தன.
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்க கட்டணங்களை இடைநிறுத்துவதற்கும் சீனாவின் அரிய-பூமி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒத்திவைப்பதற்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டிய பின்னர், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதற்கான அறிகுறிகள் எழுந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வியாழக்கிழமை (30) சந்தித்து மேலும் வர்த்தக விதிமுறைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த வாரம் பணவியல் கொள்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் என்ற வர்த்தகர்கள் நம்பிக்கையும் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
பல ஆய்வாளர்கள் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், அண்மைய விலை ஏற்றத்தின் நிலைத்தன்மை குறித்து சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
கேபிடல் எகனாமிக்ஸின் ஆய்வாளர்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களாக தங்கள் கணிப்பை திருத்தியுள்ளனர்.
இலங்கை விலை விபரம்!
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 298,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


















