தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர்.
தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, 2027 பொங்கல் பண்டிகையின் போது ரெட் ஜெயண்ட் மூவீஸால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை இந்திய ஊடகங்கள் நேற்று உறுதிப்படுத்தின.
இந்த அறிவிப்பானது இந்திய சினிமாவின் இரண்டு உயர்ந்த சக்திகளை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இடையேயான ஐந்து தசாப்த கால நட்பு மற்றும் சகோதரத்துவத்தையும் குறிக்கின்றது.
இந்த இரண்டு ஜாம்பவான்களும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
அவற்றில் அபூர்வ ராகங்கள் (1975), அவர்கள் (1977) மற்றும் 16 வயதினிலே (1977) ஆகியவை முக்கிய திரைப்படங்களாகும்.
இதில் ரஜினிகாந்த் பெரும்பாலும் வில்லனாக நடித்தார்.
அவர்கள் கடைசியாக அல்லாவுதீனும் அல்புத விளக்கும் (1979) படத்தில் நடித்தனர்.
இயக்குனர் சுந்தர் சி முன்பு ரஜினிகாந்துடன் அருணாச்சலம் (1997) படத்திலும், கமலுடன் அன்பே சிவம் (2003) படத்திலும் பணியாற்றியுள்ளார்.
தலைவர் 173 படம் 2027 ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரெட் ஜெயண்ட் மூவீஸின் கீழ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
கதை, கதாபாத்திரங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் 2027 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் நிறைவு பெற்றதும், தலைவர் 173 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



















