இந்த ஆண்டின் வலிமையான புயல்களில் ஒன்றான கல்மேகி (Kalmaegi), மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவா குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.
இந்தப் புயல், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபுவில் உள்ள முழு நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
அங்கு 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்ட எண்ணிக்கையில் கணக்கெடுக்கப்படதாத மேலும் 28 இறப்புகளை செபு மாகாண அதிகாரிகள் தெரிவித்ததாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கல்மேகி புயல் வியாழக்கிழமை (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி மீண்டும் வலுப்பெற்று நகரத் தொடங்கியது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர், கல்மேகி புயல் ஏற்படுத்திய சேதம் மற்றும் வார இறுதியில் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றொரு புயலான உவான் குறித்த கவலைகள் காரணமாக பேரிடர் நிலையை அறிவித்ததாகக் கூறினார்.
பிலிப்பைன்ஸில், பேரிடர் நிலை என்பது பெருமளவிலான உயிரிழப்புகள், சொத்துக்களுக்கு பெரும் சேதம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு நிலையாகும்.
இது அவசர நிதியை அணுகவும், தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்து வழங்குவதை விரைவாக கண்காணிக்கவும் அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது.

















