தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை காரணமாகக் கடவத்தை திசையிலிருந்து அதிவேக வீதிக்குள் நுழையும் வாகனங்கள் கடுவலை வெளியேறும் வாயிலைப் பயன்படுத்துவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடுவலை திசையிலிருந்து வரும் வாகனங்கள் கடவத்தை திசை நோக்கி அதிவேக வீதிக்குள் நுழைவதும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்து ஊழியர்கள் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக வீதித் தடைகள் நிலவும் சந்தர்ப்பங்களில், பேருந்துகளைச் செலுத்தும் போது பொலிஸ் வீதித் தடைகள் காணப்படுமாயின், அங்கு கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி தெளிவில்லாமல் உள்ள இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேருந்தை உள்ளே செலுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் போது, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் போது பயணிகளை அவர்களின் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அது குறித்துத் தெரிவித்து அவர்களை அருகில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயணிகளை அவர்களது உரிய இலக்குக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














