ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் யெவெட் கூப்பருடன் (Yvette Cooper) தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தெஹ்ரானுக்கும் லண்டனுக்கும் இடையிலான நேரடி இராஜதந்திர ஈடுபாட்டின் அரிய நிகழ்வாக இந்தப் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.
பரஸ்பர புரிதலை வலுப்படுத்தவும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களைத் தொடரவும் பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் இரு அமைச்சர்களும் இந்த தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியதாக ஈரானின் வெளிவிகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்கத்திய நாட்டினரின் நிலை குறித்து தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
















