திருகோணமலை, சேருநுவர பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் மஹிந்தபுர சந்திக்கு அருகில் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை என உறுதிபடுத்திய சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















