அமெரிக்க அரசாங்கத்தின் விசா இரத்து செய்யப்பட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுத்த பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகர் இம்ரான் அஹமட்டின் (Imran Ahmed) தடுப்புக்காவலை அமெரிக்க நீதிபதி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் தொழில்நுட்ப தளங்களை பேச்சு சுதந்திரத்தை தணிக்கை செய்யக் கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க விசா மறுக்கப்பட்ட ஐந்து பேரில் டிஜிட்டல் வெறுப்பை எதிர்க்கும் மையத்தின் (CCDH) தலைவரான இம்ரான் அஹமட்டும் ஒருவர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஆன்லைன் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் பணியைப் பாதுகாக்கும் ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை தூண்டியது.
இதனிடையே, அமெரிக்க தளங்களை தணிக்கை செய்வதற்கும் தாங்கள் எதிர்க்கும் அமெரிக்கக் கண்ணோட்டங்களை தடுப்பதற்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிளின் ஒரு பகுதியாக அவர்கள் குறித்து எழுந்த சர்ச்சைகளின் பேரில் இம்ரான் அஹமட் உள்ளிட்டோரின் விசா இரத்து செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக வொஷிங்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இந்த நிலையில், தனக்குத் தடை விதிக்கப்பட்ட முடிவு தொடர்பாக மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சட்டமா அதிபர் பமீலா பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீது அஹமட் சார்பில் புதன்கிழமை (26) சட்டப்பூர்வ முறைப்பாடு அறிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வழக்கினை வியாழக்கிழமை பரிசீலித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், தற்காலிக தடை உத்தரவுக்கு எதிரான அஹமட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
மேலும், அமெரிக்க மாவட்ட நீதிபதி வெர்னான் ப்ரோடெரிக்கின் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவானது, குறித்த வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்பு அஹமட்டை கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அதிகாரிகளுக்கு தடை விதித்தது.
















