ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டம், எலமஞ்சிலின் நகருக்கு அருகே டாடா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று (29) தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது, ஒரு பெட்டியில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட ரயில் சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து பெரும்பாலான பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டாலும், பின்னர் எரிந்த பெட்டியிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது.
B1 பெட்டியில் ஏற்பட்ட தீ, பின்னர் B2 பெட்டிக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பெட்டிகள், அருகிலுள்ள M1 பெட்டியுடன் சேர்ந்து, ரயிலின் ஏனைய பகுதிகளிலிருந்து உடனடியாக பிரிக்கப்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தில் சிக்கிய இரண்டு பெட்டிகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.
சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்ததாக அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.
இரண்டு பெட்டிகளையும் பிரித்த பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றதாகவும், மீதமுள்ள பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.















