இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ (Akshu Fernando) காலமானார்,
சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கே இந்த செய்தியை உறுதிப்படுத்தியதுடன், அக்ஷு பெர்னாண்டோ ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் என்றும், அனைவருடனும் நட்புடன் பழகக்கூடியர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28 அன்று கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட பேரழிவு விபத்தில் சிக்கி கோமாவில் இருந்தார்.
விபத்து நடந்த நேரத்தில், அக்ஷு பெர்னாண்டோ, தனது தலைமுறையின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ மற்றும் கித்ருவன் விதானகே ஆகியோரைப் போலவே அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்தார்.
அவர்களில் பலர் பின்னர் மூத்த மட்டத்தில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

27 ஜனவரி அன்று லிங்கனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2010 U-19 உலகக் கிண்ண அரையிறுதியில் அக்ஷு பெர்னாண்டோ ஒரு சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
கொழும்பு செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் பயின்ற அவர், 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்குத் தலைமை தாங்கினார்.
அதே வேளையில், 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
கழக மட்டத்தில் அவர், கோல்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், பாணந்துறை ஸ்போர்ட்ஸ் கிளப், சிலாபம் மேரியன்ஸ் மற்றும் ராகம ஸ்போர்ட்ஸ் கிளப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவரது இறுதிப் போட்டி ஒன்றில் 2018 டிசம்பர் 14 அன்று மூர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் உயிரிழப்புக்கு முன்னாள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் சக வீரர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.
















