ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg) சுற்றுலா தலத்தில் நேற்றிரவு (27) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு பீதியை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க்கில் இரவு 10.12 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியில் இருந்து வந்த சிசிடிவி காட்சிகளில் மலைச்சரிவில் இருந்து ஒரு சக்திவாய்ந்த பனிச் சுவர் இடிந்து வந்து அதன் பாதையில் பல கட்டிடங்களை மூழ்கடிப்பதைக் காட்டியது.
பனிச்சரிவின் வலிமை மற்றும் கேமராவில் தெரிந்த சேதம் இருந்தபோதிலும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவசரகாலக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் நிலைமையை மதிப்பிடுவதற்கும் மேலும் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தனர்.
காஷ்மீர் முழுவதும் செவ்வாய்க்கிழமை புதிய பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிப்பொழிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கில் சிக்கித் தவித்தமையும் குறிப்பிடத்தக்கது.















