ரதசப்தமி விழாவில் ஒரே நாளில் மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவைகளை 3.45 லட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு, அறங்காவலர் குழுவினர் கொடுத்த ஆலோசனையின்படி, இம்முறை ரதசப்தமி விழா வெகு சிறப்பாக, வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
திருமலை வருடாந்திர பிரம்மோற்சவம், திருச்சானூர் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து, ரதசப்தமி விழாவும் வெற்றிகரமாக நடந்ததில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வாகனங்களை சுமப்பவர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
வாட்ஸ்-ஆப் மூலம் பக்தர்களிடமிருந்து கருத்துக்களை அறிந்துதான் இந்த வெற்றியை நாங்கள் சாதிக்க முடிந்தது. ரதசப்தமிக்கு மட்டும் ஒரே நாளில் 3.45 லட்சம் பக்தர்கள் வாகன சேவைகளை கண்டு களித்துள்ளனர். இதற்கு துறை சார்ந்த கூட்டு முயற்சியே காரணம். காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை ரதசப்தமிக்கு 9.42 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 6.30 லட்சம் பேருக்கு சிற்றுண்டிகள், 2.90 லட்சம் பேருக்கு பால், 2.15 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
2,200 ஸ்ரீவாரி சேவகர்கள் அன்று ஒரே நாளில் பக்தர்களுக்கு இலவச சேவை புரிந்துள்ளனர். 1,800 போலீஸார், 1,414 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்டனர். 1,000 நடன கலைஞர்கள் மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். 23,000 பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது. 93 பேர் திருமலையில் இருந்து திருப்பதி அரசு மற்றும் தேவஸ்தான மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அனில்குமார் சிங்கால் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, எஸ்பி சுப்புராயுடு, தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
















