வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக கருதப்படுவதால், மூலவர் ‘இரவீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
தினமும் இக்கோயிலின் ராஜ கோபுரம் வழியாக நுழையும் சூரியக் கதிர்கள் நந்தி தேவர் மற்றும் மூலவர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக பட்டு வழிபடுவது சிறப்பம்சம் ஆகும்.
காலப்போக்கில், சுற்றியுள்ள சாலைகளின் உயரம் அதிகரித்ததால், கோயில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 அடி பள்ளத்துக்குச் சென்றது. இதனால் சூரிய ஒளி மூலவர்மீது விழுவதில் தடை ஏற்பட்டதுடன், மழைக்காலங்களில் கோயிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் பெரும் சிரமமடைந்தனர்.
இந்த நிலையில், பக்தர்களின் நீண்டநாள் கோரிக் கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘ஜாக்கி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒட்டு மொத்த கோயிலையும் தரைமட்டத்துக்கு மேல் உயர்த்தி பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. சிவ வாத்தியங்கள் முழங்க, தேவார, திருவாசகப் பண்ணிசைகள் ஒலிக்க, ராஜகோபுரம், மூலவர் சுவாமி – அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயிலைச் சுற்றிலும் திரளாக கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டதுடன், மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேவேளை திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
















