திருப்பதி ஏழுமலையான் கோயிலில். நேர்த்திக்கடனாக பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதனை 3 மாதங்களுக்கு ஒருமுறை க்ளோபல் டெண்டர் மூலம் ஆன்லைனில் தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.
இது பல கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இதனால் இதனை ‘கருப்புத் தங்கம்’ என்றும் அழைக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.சர்வ தரிசனம் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை காத்திருந்து 30 மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசையில் நின்று சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இதனால் தினசரி உண்டியல் காணிக்கையும் ரூ.4 கோடிக்கு மேல் அதிகரித்தது.
இதுபோல கடந்த மே 1ம் திகதி முதல் 27ம் திகதி வரை மட்டும் 12, 43, 063 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில் 10.65 லட்சம் பேரும், 2025 மே மாதத்தில் 10.28 லட்சம் பேரும் தலைமுடி காணிக்கை செலுத்தி இருந்தனர். இதில் 269 பெண்கள் உட்பட 1, 150 நாவிதர்கள் பணியாற்றினர்.

















