இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவலின்படி, நாடு முழுவதும் புற்றுநோயால் அன்றாடம் சுமார் 40 இறப்புகள் ஏற்படுகின்றன.
பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ இந்த தகவலை கூறினார்.
அத்துடன், இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேடு அடிப்படையாகக் கொண்டவை என்றார்.
2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய தொற்றாளர்களில் சுமார் 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் ஆவர்.
இவற்றில் ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோயாகும்.
அதே நேரத்தில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மிகவும் பரவலாக உள்ளது.
அதைத் தொடர்ந்து தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவையும் உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி 30-50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை என்றும் வைத்தியர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
மேலும் வயதானது, பாலினம், குடும்ப மரபியல் ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள் என்றும் கூறினார்.















