அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண் உறுப்பினர் மீது எரிந்து விழுந்தார்.
நேற்று இடம்பெற்ற சபை அமர்விலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் உறுப்பினர் மயான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு நீண்ட நேரமாக எழுந்து நின்று சந்தர்ப்பம் கோரினார். அதனை தவிசாளர் கண்டுகொள்ளவில்லை. ஏனைய உறுப்பினர்கள் சபையில் சத்தமிட்டுக்கொண்டு இருந்தனர்.
பின்னர் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படது. இதன்போது அவர் தனது கருத்தை கூறும்போது ஏனைய இரண்டு உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்த குறித்த பெண் உறுப்பினர், அந்த உறுப்பினர்களை கடிந்தார்.
பின்னர் தவிசாளரை நோக்கி ‘எனது கருத்தை சொல்கிறேன் நீர் ஓம் என்றால் ஓம் என்று சொல்லும், இல்லை என்றால் இல்லை என்று சொல்லும்’ என்றார்.
இதன்போது குறித்த பெண் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தவிசாளர், நீர், நான் என்று பேச முடியாது. எனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு சபையை நடாத்த முடியும். கவனமாக கதைக்க வேண்டும் என்றார். இதனால் சபையில் சிறிதுநேரம் அமளி துமளி ஏற்பட்டது.













