ஹார்முஸ் நீரிணையில் மூன்று கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்களை இடைமறித்ததாகவும், தங்களது படைகள் மீது தாக்குதல் நடத்திய ஈரானிய இராணுவத் தளங்களைக் குறிவைத்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியது.
இது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.
எனினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக ஈரான் கூறிய நிலையில், பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும் போர் நிறுத்தம் நீடித்து வருவதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மோதலை நிறுத்துவதுடன், ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தற்போதைக்குத் தீர்க்கப்படாமல் விட்டுவிடும் ஒரு அமெரிக்க முன்மொழிவுக்கு ஈரானின் பதிலுக்காக வொஷிங்டன் காத்திருந்த வேளையில், இந்தப் புதிய தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
தாக்குதலின் முழு விபரம்
ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் மற்றொரு கப்பலைத் தாக்கியதன் மூலமும், ஹார்முஸ் நீரியில் உள்ள கெஷ்ம் தீவு மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள அருகிலுள்ள பந்தர் கமீர் மற்றும் சிரிக் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலமும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவத் தலைமையகம் குற்றம் சாட்டியது.
நீரிணையின் கிழக்கிலும், சபாஹார் துறைமுகத்தின் தெற்கிலும் இருந்த அமெரிக்க இராணுவக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் பதிலடி கொடுத்ததாக அந்த இராணுவம் கூறியது.
ஈரானியத் தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக தெஹ்ரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆனால் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தங்களது சொத்துக்கள் எதுவும் தாக்கப்படவில்லை என்று கூறியது.
மூன்று கடற்படை அழிப்புக் கப்பல்களைக் குறிவைத்த இந்தத் தாக்குதலில், ஈரான் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்தியதாக சென்ட்காம் கூறியது.
இதற்குப் பதிலடியாக, ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தளங்களையும் பிற இடங்களையும் குறிவைத்ததாக அமெரிக்கா கூறியது.
பதற்றத்தை அதிகரிக்க சென்ட்காம் விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்கத் தயாராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.
பல மணி நேரத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், ஹார்முஸ் நீரிணையை ஒட்டிய ஈரானிய தீவுகள் மற்றும் கடலோர நகரங்களில் நிலைமை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று ஈரானின் பிரஸ் டிவி பின்னர் செய்தி வெளியிட்டது.
ஏப்ரல் 7 அன்று போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இரு தரப்பினரும் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
ஹார்முஸ் நீரிணையின் வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான அமெரிக்க கடற்படையின் முயற்சியை தெஹ்ரான் முறியடிக்க முற்பட்ட நிலையில், ஆறு ஈரானிய சிறிய படகுகளை அழித்ததாகவும், ஈரானிய பயண ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும் அமெரிக்க இராணுவம் திங்களன்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.















