பணி நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில் செயல்பாடுகள் தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பது குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பணி நேரங்களிலும் கடமையின் போதும், சில அதிகாரிகளும் ஊழியர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக உணர்திறன் மிக்க தகவல்களை வெளியிடும் போக்கு அவதானிக்கப்பட்டதாலேயே இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாக இத்தகைய உணர்திறன் மிக்க தகவல்களைப் பரப்புவது ரயில் சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதிக்கும் என்பதால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சுற்றறிக்கையின்படி, ரயில்வே திணைக்களத்திலிருந்து வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்கு ரயில்வே பொது முகாமையாளர், ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட தொடர்புடைய சுற்றறிக்கையானது, அதில் உள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.













