இந்து மதக் குழுவொன்றின் வருகையின்போது பெண் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக ஊழியர்களும் நிர்வாகமும் தெரிவித்தன.
போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர், சனிக்கிழமையன்று பிரான்ஸ் தலைநகரில் உள்ள அந்த முக்கியச் சின்னத்தைப் பார்வையிட்டனர்.
தாங்கள் நினைவுச் சின்னத்தை அடைந்தபோது, அங்கிருந்து நகருமாறு பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டவோய்ன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் வருகையின்போது, ஆண்களை அந்த இடங்களில் அமர்த்துவதற்காகப் பெண்கள் தங்கள் பணி இடங்களை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிர்வாகம் பின்னர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் டவோய்ன் தெரிவித்தார்.
இது ஊழியர்களிடம், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; நடந்த சம்பவங்களாலும், சிலர் நடத்தப்பட்ட விதத்தாலும் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள், என்று டவோய்ன் கூறினார்.













