உலக டூவர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், தாய்வானின் டாய் ட்ஸூ யிங் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பேங்கொக் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஒலிம்பிக் சம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின், உலகின் முதல்நிலை வீராங்கனையான டாய் ட்ஸூ யிங்கும் மோதினர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டாய் ட்ஸூ யிங் 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.
எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-8 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூன்றாவது மற்றும் இறுதி செட் பரபரப்படைந்தது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் இழுபறியாக நீடித்த போட்டியில் டாய் ட்ஸூ யிங், இறுதிசெட்டை 21-19 என்ற கணக்கில் போராடி வென்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
உலக டூவர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரில், டாய் ட்ஸூ யிங் வெல்லும் மூன்றாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
தாய்லாந்து பகிரங்க பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியிலும் கரோலினாவிடம் தோற்று ஏமாற்றத்துக்குள்ளான டாய் ட்ஸூ, அந்த தோல்விகளுக்கு உலக டூவர் பைனல்சில் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.