இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சிறுபான்மையினரை சித்திரவதைக்குள்ளாக்கவும் விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 9 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கடுமையாக விரிவுபடுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான கண்காணிப்பை வலுப்படுத்தவும் பொறுப்கூறலை உறுதி செய்யவும் மனித உரிமைகள் பேரவை பரிசீலித்து வருகின்ற நிலையில் இந்த கட்டுப்பாடு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவரது அடிப்படை உரிமைகளை மீறி சிறுபான்மையினரை எளிதில் குறிவைக்க அனுமதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை புர்கா தடை மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடசாலைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு மத சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக மீறும் செயற்பாடு என மீனாக்ஷி கங்குலி கூறினார்.
குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை குறிவைக்க ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களை பயன்படுத்தியுள்ள அதே நேரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை மற்றும் பாகுபாட்டை வெளிப்படுத்துவார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.