பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சர் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதாகக் கூறியுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில் அவர் அமைச்சர். தனது அமைச்சுப் பதவியை தமிழ் மக்கள் மத்தியில் தக்கவைப்பதற்கான ஒரு பம்மாத்தாகவே நாம் இந்த விடயத்தைப் பார்க்கின்றோம்.
ஒரு அதிகாரமுள்ள அமைச்சருக்குத் தெரியும் கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்திய ரோலர் வந்து தொழில் செய்கின்றது. இதை கரையில் இருந்து நாங்கள் பார்க்கின்றோம்.
அனைத்து கடற்கரையிலும் அதவாவது, கொக்குத்தொடுவாயில் இருந்து தீவகம் வரை 50 மீற்றருக்கு ஒரு கடற்படையின் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்படைக்கு இந்திய ரோலர் வருவது தெரியும். எனவே, அதனைப் பிடிக்க முடியாது என்றால் ஏன் அமைச்சர் என்று சொல்லுகின்றார். அந்தஸ்துள்ள அமைச்சர் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதென்று யாரை ஏமாற்றுகின்றார்? இது மக்களை ஏமாற்றும் விடயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.