வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கலந்துரையாடல், மாவட்டச் செயலகக் கேட்போர் கூட்டத்தில் அமைச்சரின் பங்கேற்புடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், “விவசாய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வன்னி மாவட்டத்திற்கு இவ்வருடம் மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம்.
இதன்படி, வவுனியா மாவட்டதிற்கு ஆயிரத்து 352 மில்லியனும் முல்லைத்தீவுக்கு ஆயிரத்து 699 மில்லியனும் மன்னார் மாவட்டத்திற்கு 262 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது, விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வன்னியில் விவசாயப் பயிர்கள் யானைகளால் சேதமாக்கப்படும் நிலையில், இதனைத் தடுப்பதற்காக யானை வேலிகளை அமைத்து நிரந்தரத் தீர்வினை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால் கோரப்பட்டது.
அத்துடன், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களங்களால் பொதுமக்களின் காணிகள் எல்லையிடப்படுவது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கமுடியும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.