இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் பிரதிநிதியுமான டெபோரா ரோஸ் (Deborah Ross) அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், இலங்கையுடனான இராஜதந்திர நகர்வுகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யவும் அமெரிக்காவை வலியுறுத்துகிறார்.
2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.
இந்நிலையில், இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவுடன், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது.
இது உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது என டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வாரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளருக்கு டெபோரா ரோஸ் அனுப்பியுள்ள கடித்தின் முழு விபரம் வருமாறு,
“மாநிலச் செயலாளராக நீங்கள் பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள்!
இலங்கையில் மனித உரிமைகளை நிவர்த்தி செய்வது உட்பட பல விடயங்களில் உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்கு 2009இல் முடிவடைந்த ஆயுத மோதலுக்குப் பின்னர் நீதி மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அல்லது மதிக்க அரசாங்கம் தவறியதால் நாங்கள் கவலைப்படுகிறோம்.
இறுதி மோதல், இலங்கையின் தமிழ் சமூகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இறந்தனர்.
இலங்கையுடனான இராஜதந்திர ஈடுபாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை ஊக்குவிக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை (30/1) வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது உங்களுக்குத் தெரியும். இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது. இந்த விலகலானது, உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டு பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள நபர்களை மூத்த அரசாங்க பதவிகளுக்கு உயர்த்தியுள்ளது, முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மாற்றியமைத்தது, ஜனாதிபதி பதவியேற்புக்குப் பின்னால் அதிகாரத்தைப் பலப்படுத்தியது, போர்க் குற்றங்களில் ஈடுபடுவோரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுப்பதற்கும் தடையை ஏற்படுத்தும் முயற்சிகள், பெரும்பான்மை மற்றும் பிரிவினைவாத சொல்லாட்சியை ஊக்குவித்தது, மனித உரிமை ஆதரவாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை மேற்கொள்வது மற்றும் எதிர்ப்பாளர்களைக் கடத்தி சித்திரவதை செய்ய பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் பற்றிய அந்த அறிக்கை நீடிக்கின்றது.
ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், “கடந்த கால மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன” என எச்சரித்துள்ளார்.
அத்துடன், அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் ஒரு வரைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன.
அந்தத் தீர்மானத்தில், இலங்கையில் கடந்த கால மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாதமை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த முற்படுகிறது.
மேலும், “மனித உரிமை மீறல்களுக்கான செயன்முறைகளுக்கான எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மேம்பட்ட கண்காணிப்பு உள்ளிட்டவற்றை தீர்மானம் கோருகிறது.
இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், இது நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமைகள் பேரவையின் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளிடம் அமெரிக்கா தீவிரமாக ஆதரவைப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டச் சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற அமெரிக்காவை சர்வதேச அரங்கில் முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், இலங்கை விடயத்தில் உங்களின் அக்கறைக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் – சுரேந்திரன் லிதர்சன்