தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய மக்கள், தற்போது அதனை எண்ணி வெட்கப்படுகின்றனரென முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆட்சிபீடம் ஏறுவதற்கு காரணமாக இருந்த 69 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்த்து வெட்கப்படுகின்றார்கள்.
அதாவது எந்த அச்சமும் இல்லாமல் பட்ட பகலில் நடந்த பல பெரிய மோசடிகளைப் பற்றி முழு நாடும் பேசுகிறது.
மேலும் சீனி இறக்குமதியின்போது இடம்பெற்றுள்ள பாரிய கொள்ளைக்கு அரசாங்கம் பதிலளிக்க மறுக்க முடியாது.
நாட்டில் பதிவான மிக மோசமான மோசடி என்று கருதப்படும் சீனி வரி மோசடி உட்பட அனைத்து பெரிய அளவிலான மோசடிகளில் ஈடுபட்ட அனைவரையும் ஜனாதிபதி, சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.