இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதுடைய சியாமளா கோலி என்ற ஆசிரியையே இவ்வாறு முப்பது கிலோமீற்றர் கடல் தூரத்தைக் கடந்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 04:10 மணிக்கு குறித்த பெண் நீச்சல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை 05:50 மணிக்கு தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர் சென்றடைந்தார்.
குறித்த கடற்பகுதி மிகவும் ஆழம் குறைந்ததாக இருந்தாலும் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது.
இதேவேளை, ஏற்கனவே 1954ஆம் ஆண்டு குறித்த பாக் ஜலசந்திக் கடற்பகுதியை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த நவரத்தினசாமி என்பவர் முதன்முறையாக நீந்திக் கடந்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த மிகிர்சென் என்பவர் 1966ஆம் ஆண்டில் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.
இதைவிட, வல்வெட்டித்துறையின் நீச்சல் வீரரான குமார் ஆனந்தனும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் என நீந்திச் சாதித்தார். குறித்த இருவழிக் கடல் தூரத்தை 51 மணித்தியாலங்களில் கடந்து 1971ஆம் ஆண்டில் இந்தச் சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.