வடக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய காணி விடயங்கள் தொடர்பாகவும் மக்களுடைய நிலைமைகள் குறித்தும் பொது அமைப்புக்கள் மற்றும் வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதி மக்களுடன் ஆராயப்பட்டது.
தேசிய காணி ஆணையாளருடன் காணி விடயங்கள் தொடர்பாக பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பாக வடக்கில், நில ஆக்கிரமிப்பு, இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய முப்படையினருக்குத் தேவையான காணி அபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளைய தினம் நாம் பேசவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.