பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விபரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று (சனிக்கிழமை) குறிப்பிட்டுள்ளது.
68 வயதாக பிரதமர் இம்ரான்கான், சீனாவினால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை கடந்த வியாழக்கிழமை போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வது உட்பட இம்ரான் கான், அண்மையில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மார்ச் 10ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் பொது மக்களுக்கான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், சீனாவின் சினோபார்ம் மற்றும் கன்சினோபியோ, ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.