தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏழாயிரத்து 155 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கன்னியாக்குமாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 23 வேட்புமனுக்கள் தாக்கலாகின.
இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி (சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி), தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்), மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர் தொகுதி) ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவும் (சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி), நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவும் (திருவொற்றியூர் தொகுதி), மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் (கோவை தெற்குத் தொகுதி) மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, ஏனைய மனுக்களில் தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், சரியான ஆவணங்கள் கொண்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே இரண்டாம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.