பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிலான குழுவினர் பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு, டாக்காவில் உள்ள பங்களாதேஷின் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, பொருளாதாரம், இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு நடவடிக்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றம், விவசாயம் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் கொரோனா தொற்று நெருக்கடிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் ஆறு ஒப்பந்தங்கள் இரு நாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
இதன்படி, இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்தல், விவசாயத்துறை மேம்பாடு, திறன் அபிவிருத்திப் பறிமாற்றம், சுகாதார தாதிகள் சேவைகள் பரிமாற்றம், கல்வித் துறை மற்றும் கலாசார மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.