பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம், அம்பாறை உகன விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீரர்கள், சுமார் மூவாயிரத்து 500 அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது, இவர்களின் பரசூட்கள் ஒன்றுக்கொன்று மோதி சிக்குண்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விமானப் படையினர் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், கண்டி – கடுகஸ்தோட்டை பிரதேசத்தின் பொல்கொல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பத்மதிலக என்பவரே உயிரிழந்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.