பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில், அவரது அவலுகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளன.
இந்நிலையில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார். 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்ட முற்படுகின்றனர்.
இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் பல நாடுகளைத் திரை மறைவிலிருந்து இந்தியா இயக்கியது.
இந்தப் பிரேரணை வெற்றிபெற வேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய இந்தியா இந்தப் பிரேரணையில் நடுநிலை வகித்தது ஈழத் தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளைக் கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.
ஆனால், இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப்பட்டார்கள். இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.
அந்தப் பிரேரணையின் கனதியை, அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களைக் கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.
இன்றுகூட வெளியிறவுத்துறை அமைச்சர், மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் 13ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐ.நா. தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும். இருந்தபோதிலும் இலங்கை தொடர்பாக சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது.
ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும், சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள் முன்னெடுப்பதும் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.