மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகள் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் இன்று (புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள ஓவ்வொரு கிராமத்திற்கும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த, வறுமைக் கோட்டுக்குள்ளாக்கப்பட்ட வர்கள் என்னும் அடிப்படையில் சில வருடங்களாக ஆண்டு தோறும் கிராமத்திற்கு ஒரு வீடு என்னும் திட்டம் அமுல்படுத்தப் பட்டுக் கொண்டு வருகின்றது.
கிராமங்களில் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் அரசியற்கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமா? இந்தக் கொள்கையை ஒரு சில பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள சில உத்தியோகத்தர்கள் அமுல்படுத்தகின்றார்களா? அப்படியாயின் அரச நிருவாக கட்டமைப்பு முறையொன்று தேவையில்லை.
மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகள். உத்தியோகத்தர்கள் மிகவும் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், சமூக நலனோடு சரியான கொள்கைகளை அமுல்படுத்தி வருவது நான் அறிந்த விடயமே. ஆனால் ஒரு சிலரை ஒரு சிலர் நிர்ப்பந்திக்கக் கூடாது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந்த. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சில நாடுகள், சில நிறுவனங்களிடமிருந்து பெறுகின்ற நிதியிலிருந்தும். இந்தஅரசின் மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வழங்கப் படுகின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வளங்களும், நிதியும் தனிப்பட்ட நபர்களினதோ. அரசியற் கட்சியினதோ நிதிகள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பயனாளிகளை தெரிவு செய்யும் போது சரியான கொள்கைகளை அமுல்படுத்துமாறு அரசாங்க அதிபர், தேசியவீடமைப்பு அபிவிருத்தி,அதிகாரசபை. பிரதேச செயலாளர் போன்றோர்களுக்கு விரிவான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.